பரமக்குடியில் பாரதிநகர் ரோட்டில் கட்டப்படாத வாறுகாலில் ஆபத்து
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பாரதி நகர் பகுதியில் வாறுகால் கட்டப்படாமல் கழிவுநீர் செல்லும் நிலையில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பரமக்குடியில் மதுரை---ராமேஸ்வரம் நெடுஞ்சாலை ஓரத்தில் பாரதிநகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ள நிலையில் வணிக நிறுவனங்கள், வங்கி, லாட்ஜ் என செயல்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மணல் பகுதியில் பள்ளம் தோண்டி கடத்தப்படுகிறது.தொடர்ந்து ரோடு அமைக்கப்பட்ட நிலையில் கழிவுநீர் செல்லும் வாறுகால் கட்டுமானம் இல்லாமல் இருக்கிறது. இதனால் சாதாரண நாட்களை விட மழை நேரங்களில் வாறுகால் இருப்பது தெரியாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தடுமாறும் நிலை உள்ளது. இதே போல் வாகனங்களும் விபத்திற்ள்ளாகின்றன.இந்நிலையில் ரோட்டில் குறுக்கிடும் பகுதியில் கல்வெட்டு பாலம் இல்லாதது குறித்து கடந்த காலங்களில் 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்படி கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்ட நிலையில் வாறுகாலையும் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.