பரமக்குடியில் மின் கம்பங்களில் கட்டப்படும் வயர்களால் ஆபத்து
பரமக்குடி: பரமக்குடியில் அனைத்து வகையான மின் கம்பங்களிலும் கேபிள் மற்றும் தனியார் இன்டர்நெட் வயர்களை கட்டி வைத்துள்ளதால் ஏற்படும் விபத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். பரமக்குடி நகராட்சி மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் மின்கம்பங்கள் உள்ளன. இதன்மூலம் வீடுகளுக்கு மின் சப்ளை செல்வதுடன் தெரு விளக்குகளும் பொருத்தி பராமரிக்கப்படுகிறது. இந்த மின் கம்பங்களில் ஏற்படும் பிரச்னைகளை சீர் செய்ய வயர்மேன்கள் ஏறும் நிலை உள்ளது. இச்சூழலில் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கேபிள் மற்றும் தனியார் இன்டர்நெட் வயர்களை கட்டி வைத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு மின்கம்பத்திலும் அதிகபட்சமாக 10க்கும் மேற்பட்ட வயர்களை இழுத்து கட்டி வைத்துள்ளனர். உயர் அழுத்த மின்கம்பங்களையும் தற்போது விட்டு வைப்பதாக தெரியவில்லை. ஒரு சில இன்டர்நெட் நிறுவனங்கள் தங்களுக்கு என தனியாக கம்பங்களை நட்டு வயர்களை கொண்டு செல்கின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் கம்பங்களில் இழுத்து கட்டி வைத்துள்ள கம்பிகள் ஆங்காங்கே அருந்து சுருண்டு கிடக்கிறது. இவை காற்றின் வேகத்தால் மின் கம்பிகளில் உரசி விபத்துக்கு வழிவகுக்கும் படி இருக்கிறது. வீடுகளில் கேபிள் மற்றும் அலைபேசி இணைப்புகளில் மின்சாரம் தாக்கும் போது மிகப்பெரிய விபத்துக்கு வழி வகுக்கும். இது குறித்து அவ்வப்போது மின்வாரியத்தால் எச்சரிக்கப்படும் நிலையில் விபத்துக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே மின் ஊழியர்கள் துரித பணி செய்யவும், அனைவரின் உயிருக்கு உத்திரவாதத்தை ஏற்படுத்தும் வகையில், துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.