கலெக்டர் அலுவலக கருவூல கட்டடத்தில்... ஆபத்து: அச்சத்தில் பல துறைகளின் பணியாளர்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் இரண்டு தளங்களுடன் கருவூலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்களை கொண்ட பழைய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது. கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதால் பணியாளர்கள், துறைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.பட்டணம்காத்தான் சேதுபதிநகர் பெருந்திட்ட வளாகத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கரூவூலக கட்டடத்தின் இரு மாடிகளில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம், பொது வினியோகத்திட்ட அலுவலகம், டாப்கோபெட் திட்ட அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்புத்துறை அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், அஞ்சலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.இந்த அலுவலகங்களுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து அலுவலர்கள், மக்கள் பலர் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து கூரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரிகின்றன். மேலும் கழிப்பறையும் சுத்தம் செய்யப்படாமல் கறை படிந்து துர்நாற்றம் வீசுவதால் அலுவலர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கருவூல அலுவலகம் முன்பகுதியை மட்டும் பவுடர் அடித்து கட்டடம் போல மாற்றியுள்ளதாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் விஜயராமலிங்கம் கூறுகையில், முதல் தளத்தில் உள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள கீழ்தளத்திற்கு வரும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு மாவட்ட கருவூல அலுவலக 'எச்' பிரிவு மற்றும் அதன் அருகாமையிலுள்ள அறைகளில் நீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது.'எச்' பிரிவு அறை அருகே முதல் தளத்திலிருந்து தண்ணீர் கீழ்த்தளத்தில் உள்ள அலுவலகம் முழுவதும் வடிந்து அங்கு வைத்திருக்கக்கூடிய கோப்புகள் சேதமடையும் நிலையில் உள்ளது. மேலும் பராமரிப்பின்றி பழுதடைந்து ஊழியர்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தின் அருகே உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றத்துடன் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு பணியாற்றும் பணியாளர்கள், வந்து செல்லும் மக்கள் நலன் கருதி விபத்து அபாயத்தைத் தவிர்க்க கட்டடத்தை முழுமையாக சீரமைத்து கழிப்பறையை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.