உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டீலர்களுக்கு யூரியா உரம் கிடைப்பதில் சிக்கல் விலை உயரும் அபாயம்

டீலர்களுக்கு யூரியா உரம் கிடைப்பதில் சிக்கல் விலை உயரும் அபாயம்

ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் தனியார் உரக்கடைகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்துார், கடலாடி, கமுதி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட 11 யூனியன்களில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் நெல் விதைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல் விவசாயப் பணிகள் நடப்பாண்டில் துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய உரங்கள் இருப்பு வைக்கப்படாத நிலை உள்ளது. குறிப்பாக தனியார் உரக்கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட டீலர்களிடம் யூரியா, டி.ஏ.பி., உள்ளிட்ட உரங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் பல்வேறு நிபந்தனைகள் விதித் துள்ளனர். குறிப்பிட்ட உரத்துடன் வேறு சில உரங்களையும் கொள்முதல் செய்தால் மட்டுமே யூரியா உள்ளிட்ட உரங்கள் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தி வருவதால் யூரியா உள்ளிட்ட முக்கிய உரங்களை கொள்முதல் செய்வதில் தனியார் உரக்கடையினரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உரங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதைப்பு பணிகள் துவங்கிய நிலையிலேயே ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தட்டுப்பாட்டால் ரூ.268 க்கு விற்பனை செய்ய வேண்டிய யூரியா ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கும் விவசாயிகளிடம் யூரியா இருப்பு இல்லை என செயற்கை தட்டுப்பாடை ஏற்படுத்தி விவசாயிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு கடன் சங்கத்தில் போதிய உரங்களை இருப்பு வைப்பதுடன், தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை