மீன்பிடி குறைவு கால நிவாரணம் தாமதம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவதால் வேதனையில் உள்ளனர். அக்., நவ., டிச.,ல் பருவமழை சீசனில் ஏற்படும் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் முடங்குவர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு குறைந்த கால மீன்பிடி நிவாரணமாக ஒரு மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.6000 வழங்குகிறது. இந்த நிவாரணம் வழக்கமாக அக்டோபர் முதல்வாரத்தில் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். அதன்படி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள 15 ஆயிரம் மீனவர் குடும்பத்திற்கு மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.9 கோடி அக்.,ல் வழங்க வேண்டும். இந்த நிவாரணத் தொகையை எதிர்பார்த்து மீனவர்கள் தீபாவளி பண்டிகைக்கான புத்தாடை, இனிப்பு, பலகாரம் வாங்க காத்திருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு இதனை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் வேதனை அடைகின்றனர். இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மீனவ குடும்ப தலைவரின் அடையாள அட்டை, ஆதாரை சரிபார்க்கும் பணி நடக்கிறது. இப்படி முடிந்ததும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.