உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாலிநோக்கம் கடற்கரையை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வலியுறுத்தல்! ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்

வாலிநோக்கம் கடற்கரையை சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்க வலியுறுத்தல்! ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்

சிக்கல்; வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையில் கடற்பாறையின் மீது பட்டு தெறிக்கும் கடல் அலைகளின் அழகை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவ்விடத்தை சுற்றுலா ஸ்தலமாக அறிவித்து, சிறுவர் பூங்கா, கழிப்பறை, குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து 47 கி.மீ., தொலைவில் உள்ளது வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரையாகும். வாலிநோக்கம் மன்னார் வளைகுடா கடற்கரை 4 கி.மீ., தொலைவிற்கு பரந்த வெள்ளை மணற்பகுதியாக உள்ள நிலையில் பேரலைகளின் தாக்கத்திலிருந்து இயற்கையாகவே அரணாக கடற்பறைகள் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக எல்லா காலங்களிலும் பலத்த காற்று வீசுவது வழக்கம். குறிப்பாக ஆனி, ஆடி, ஆவணி உள்ளிட்ட மாதங்களில் பேரலைகளின் தாக்கம் மிகுதியாகவே இருக்கும்.

பல்வேறு வடிவங்களில பாறைகள்:

பேரலைகளின் தாக்கத்திலிருந்து இயற்கையாகவே பாதுகாப்பாக விளங்கும் கடப்பாறையின் வடிவங்கள் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றன. குதிரையின் குழம்பு வடிவம், மனித மண்டை ஓட்டு வடிவம், குரங்கு முக வடிவம் உள்ளிட்ட வடிவங்களில் பாறைகள் மிகுதியாக காணப்படுகின்றன. சிறிய கல்லின் அடிப்பகுதி மீது 20 டன் எடை கொண்ட பெரிய பாறையை தாங்கி பிடித்திருப்பது சுற்றுலா பயணிகளை ஆச்சர்யப்படுத்துகிறது.

கோயில் துாண்கள் வடிவமைப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களான திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர்சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் துாண்கள் இங்குள்ள கடற்பாறையின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ல் சுனாமி வேளையில் கடல் வற்றியவுடன் பிரம்மாண்டமான பள்ளங்கள் காணப்பட்டன. இங்குள்ள பல கடற்பாறைகளில் வெட்டி எடுத்துச் சென்றதற்கான எச்சங்கள் மிச்சங்களாகவே உள்ளன. கடற்பாறையின் மீது பட்டு தெறிக்கும் கடல் அலைகளை காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய யாத்திரீகர்கள் ஏர்வாடி சென்று விட்டு வாலிநோக்கம் கடற்கரைக்கும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

* அடிப்படை வசதியில்லை:

இத்தகையக சிறப்பு வாய்ந்த வாலிநோக்கள் கடற்கரை பகுதி மீனவர் காலனி சாலை மற்றும் சாத்தார் கோயில் வரை செல்லக்கூடிய சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளதால் அதில் பயணிக்க கூடிய வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து கிராம சபை கூட்டத்தில் புதிய தார் சாலை அமைக்க கோரியும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது. மாவட்ட சுற்றுலாத்துறை கையேட்டில் மட்டுமே வாலிநோக்கம் கடற்பகுதி உள்ளது. ஆனால் எவ்வித அடிப்பவை வசதியும் செய்துதரவில்லை. எனவே வாலிநோக்கம் கடற்கரையை சுற்றுலா ஸ்தலமாக அறிவித்து கடற்கரை வரை தார் சாலை வசதி வேண்டும். குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆழமான கடல் பகுதியாக உள்ளதால் அதனருகே எச்சரிக்கை பலகை ஒன்றை நிறுவிட வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ