பரமக்குடி பெருமாளுக்கு மாவிளக்கு வைத்த பக்தர்கள்
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் நாள் முழுவதும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுடன் மே 7ல் துவங்கியது. தினமும் பெருமாள் சர்வ அலங்காரத்துடன் யாகசாலை முன்பு எழுந்தருளினார். நேற்று காலையில் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி மூலவர் பரமசுவாமி, உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் காவல் தெய்வம் கருப்பணசுவாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து அபிஷேகம் நடத்தினர். நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். பரமக்குடி வைகை ஆறு உட்பட நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவையொட்டி இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.