ராமேஸ்வரம் கோயிலில் பக்தர் இறப்புபரிகார பூஜை செய்ய வலியுறுத்தல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர் இறந்ததால் பரிகார பூஜை செய்ய வேண்டும் என தமிழக ஹிந்து துறவிகள் பேரவை, அனைத்து ஹிந்து இயக்கங்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி, ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலையானந்தசாமி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பிறகு சுடலையானந்தசாமி கூறியதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மார்ச் 18ல் பக்தர் ராஜ்தாஸ் இறந்து விட்டார். கோயிலில் உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும். கோயில் நிர்வாகத்தினர் சரியாக வசதி செய்து தராததால் கட்டண வரிசையில் நின்றிருந்த பக்தர் இறந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதுபதி மன்னர் காலத்தில் கட்டண தரிசன முறை இல்லை. தஞ்சாவூர், திருச்செந்துார் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் இறந்துள்ளனர்.எனவே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். 45 ஆயிரம் கோயில்களுக்கு 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. பழநி முருகன் கோயிலில் ஆண்டுக்கு ரூ.350 கோடி வருவாய் வருகிறது. கட்டணத்தை வசூல் செய்து தமிழக அரசு பாவத்தை சேர்க்கிறது.இவ்விஷயத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரடியாக சென்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. பரிகார யாக பூஜை செய்யவில்லை என்றால் ஊர், நாட்டிற்கு ஆபத்து ஏற்படும். இதை கண்டித்து அனைத்து ஹிந்து இயக்கங்கள், பக்தர்களை திரட்டி ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதம் ஈடுபடுவோம் என்றார். பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் கண்ணன் சிவா, தலைவர் செல்வகுமார் உடனிருந்தனர்.