தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கடல் அரிப்பால் சேதம்
ராமேஸ்வரம்:கடல் அலை அரிப்பால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 2017ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து கடல் அழகை பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களாக வீசும் தென்மேற்கு பருவக்காற்றால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இவை தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பாறாங்கற்கள் மீது மோதி ஆக்ரோஷமாக மேலே எழுந்தன. இதனால் சாலையில் கடல் அரிப்பு ஏற்பட்டு 10 அடி அகலத்தில் சேதமடைந்துள்ளது. இதனை விரைவில் சீரமைக்காவிடில் தேசிய நெடுஞ்சாலை மேலும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.