சாதனையாளர்களை ஊக்குவிக்கும் ‛தினமலர்
ராமநாதபுரம் : பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை 'தினமலர்' நாளிதழ் ஊக்குவித்து வருவதாக ராமநாதபுரம் கம்பன் கழக விழாவில் அதன் நிறுவனத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்தார். ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தில் 26ம் ஆண்டு கம்பன் கழக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இருநாட்கள் நடந்த விழாவில் கம்பனின் கவித்திறன் குறித்து விவாதம் நடந்தது. ராமநாதபுரம் கம்பன் கழக நிறுவனத் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: தினமலர் நாளிதழில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கட்டுரைகள் இடம்பெறும். அதுபோன்ற சாதனையாளர்களை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிக்க வேண்டும். அதில் இடம்பெற்ற சாதனையாளரை தேடிக் கண்டுபிடித்து கம்பன் விழாவில் விருது வழங்கப்படுகிறது என்றார். எழுத்தாளர் பாரதி கிருஷ்ணக்குமார் அலகிலா விளையாட்டுடையார்' எனும் தலைப்பில் பேசுகையில் உலகம் முழுவதும் 300 மொழிகளில்ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் பலர் வால்மீகி ராமாயணத்தை அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்தனர். கம்பர் ராமாயணத்தை மொழிப்பெயர்ப்பு செய்யாமல் தமிழக பண்பாட்டிற்கு ஏற்ப மொழியாக்கம் செய்துள்ளார் என்றார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு எழுத்தாளர் பாரதி கிருஷ்ணக்குமார் கம்பன் விருது வழங்கினார். கல்வி விருது -ரிகானா, மருத்துவர் விருது - டாக்டர் பரக்கத்நிஷா, சமூக நல்லிணக்க விருது- அன்பவர்பாஷா, நாட்டியத்தாரகை விருது நிகிதாஹரிணி, நாட்டிய சிரோன்மணி விருது - ஸ்ரீஅம்ஸினி, வணிகர் விருது தீபன் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் கம்பன் கழக பொதுச்செயலாளர் மானுடப்பிரியன், பொருளாளர் அப்துல்மாலிக் பங்கேற்றனர்.