உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடந்த ஆண்டை விட நேரடியாக நெல் கொள்முதல் 3 மடங்கு அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட நேரடியாக நெல் கொள்முதல் 3 மடங்கு அதிகரிப்பு

ராமநாதபுரம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை, தனியார் மூலம் 62 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. இவ்விடங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து 30 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக கண்மாய் பாசனத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே ஆடிப்பெருக்கில் வயலை தயார் செய்து செப்.,ல் நெல் விதைக்கின்றனர். நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடை நேரத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் மையம் துவங்குவது இல்லை. இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று விவசாயிகள் ரூ.பல ஆயிரம் இழப்பை சந்திக்கின்றனர். 2024ம் ஆண்டில் 60 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 300 டன் நெல் கொள்முதல் செய்தனர். இவ்வாண்டில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை, தனியார் அமைப்பினர் இணைந்து 62 நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டது. சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 2450 மற்றும் பொது ரகம் குவிண்டால் ரூ. 2405க்கு கொள்முதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் பொதுமேலாளர் மெர்லின் பாரதி கூறுகையில், அறுவடைக்கு முன்பாகவே கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையுள்ள இடங்கள் குறித்து விபரங்கள் சேகரித்து விவசாயிகளின் கோரிக்கை படி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக 30 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ