ஆற்றாங்கரை முகத்துவாரப்பகுதியில் சுற்றுலாத்துறை இயக்குநர் ஆய்வு
ராமநாதபுரம்: -தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராமநாதபுரம் அருகேயுள்ள ஆற்றாங்கரை முகத் துவாரப்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார்.ராமநாதபுரத்தில் வைகை ஆறு கடலில் கலக்கும் பகுதி ஆற்றாங்கரை கடற்கரைப்பகுதியாகும். இந்தப்பகுதியில் காயல் உள்ளது. இங்கு நாட்டுப்படகுகள் இப்பகுதியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இயற்கையில் அமைந்துள்ள காயல் பகுதியில் படகுகள் நிறுத்தம் செய்வதால் இந்தப்பகுதி சுற்றுலா தலமாக மாற்றம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இப்பகுதியில் பயணிகள் படகு இயக்குதல், நீர் சாகச விளையாட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.இப்பகுதியினை தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டார். அவருடன் ராமநாதபுரம் சுற்றுலா அலுவலர் நித்தியகல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது ஆற்றாங்கரை பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அதிகாரிகளிடம் முன்னாள் ஊராட்சித்தலைவர் முஹமது அலி ஜின்னா, ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் நுாருல் அபான் ஆகியோர் விரிவாக எடுத்துக்கூறினர்.