கனமழையால் கருவாடு கிலோ ரூ.200 வரை உயர்வு
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வி.வி.ஆர்., நகரில் கருவாடு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. துாத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், கன்னியாகுமரி, குளச்சல், முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிடிக்கப்படும் நகரை, காரா, சூவாரை, நெத்திலி, ஊழி, பண்ணா, கத்தாழை, கீரி, சீலா, வாளை, முட்டைப்பாறை, மாவுலா உள்ளிட்ட மீன்களை வாங்குகின்றனர். உப்பு தொட்டிகளில் ஊறவைத்து, தென்னை நார் விரிப்புகளில் உலர வைக்கின்றனர்.சீலா, மாவுலா, வாளை, பாறை உள்ளிட்ட மீன்களின் குடல் பகுதியை அகற்றிவிட்டு, அவற்றை உப்பு, மஞ்சள் முதலியவற்றை இட்டு பாதுகாப்பாக மணலுக்குள் புதைத்து வைத்து, 10 நாட்களுக்கு பிறகு எடுக்கின்றனர். இவ்வாறாக மீன்களை பதப்படுத்தி உலர வைத்து வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். மழைக்காலம் துவங்கியுள்ளதால், கருவாடு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.வியாபாரி ஜான்சன் கூறுகையில், ''பெரிய அளவிலான முதல் தர சீலா மீன் கருவாடு கிலோ 800 ரூபாய் விற்றது; தற்போது 1,000 முதல் 1,200 ரூபாய் வரை விற்கிறது. இதர கருவாடு கிலோவிற்கு 20 முதல் 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது,'' என்றார்.