பரமக்குடி-முதுகுளத்துார் ரோட்டில் சப்வே இருந்தும் பயனில்லை சீரமைக்க வழி தேடுங்க சார்...
பரமக்குடி: பரமக்குடி, முதுகுளத்துார் ரோட்டில் ரயில்வே டிராக் குறுக்கிடும் நிலையில் சப்வே இருந்தும் பயனிலை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து முதுகுளத்துார் ரோடு பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் தொடர் நெரிசலால் ரயில்வே டிராக்கை கடக்க முடியாமல் வாகனங்கள் நீண்ட துாரம் நிற்கின்றன. இதனால் மேம்பாலம், அப்பகுதி மக்கள் எளிதாக கடந்து செல்ல சப்வே அமைக்கப்பட்டது.இதில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. இதனை வெளியேற்ற தானியங்கி மோட்டார் பொருத்தப்பட்டும் பயனின்றி அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணி செய்கின்றனர். ஆனால் கழிவுநீர் சில மாதங்களாக தொடர்ந்து சப்வேயில் கசிந்து தேங்கும் நிலை உள்ளது.துர்நாற்றம் ஒரு புறம் இருக்கும் நிலையில் சப்வேயை கடக்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தை கடக்க அரை கி.மீ., வரை நடக்க வேண்டி உள்ளதுடன் சப்வேயும் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்கிறது.தொடர்ந்து மக்கள் பழைய நிலையிலேயே ரயில்வே டிராக்கை ஆபத்தான சூழலில் கடக்கும் நிலையில் இருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் அப்பகுதி மக்கள் மரண பயத்துடன் செல்கின்றனர்.எனவே சப்வேயில் தடையில்லாத பயணம் மேற்கொள்ள வழி காட்ட வேண்டும், என துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.