உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எதிர்பார்ப்பு...:  மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் மாநகராட்சி  ஆகுமா: ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது

எதிர்பார்ப்பு...:  மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் மாநகராட்சி  ஆகுமா: ஊராட்சிகளை இணைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது

சட்டசபை தேர்தலுக்கு ஊராட்சிகளை இணைத்து மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ராமநாதபுரம் நகராட்சிக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கும் முன்பே 2017ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி, ராமநாதபுரம் நகராட்சி அருகேயுள்ள பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை, சூரன்கோட்டை ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஜி.ஆர்.நுாற்றாண்டு விழாவில் அறிவித்ததால் அவசரமாக சிறப்பு நிலை அந்தஸ்து ராமநாதபுரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. நகர் எல்லை விரிவாக்கப் பணிகள் ஆரம்ப கட்ட நிலையில் அப்படியே உள்ளது. மாறாக தற்போது வரை பழைய 33 வார்டுகள் உள்ளன. 2023ல் ராமநாதபுரம் நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்துக்கான அரசாணை வெளியானது. அடுத்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ராமநாதபுரம் நகராட்சியை விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2025 சட்டசபை கூட்டத் தொடரில் ராமநாதபுரத்திற்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட உள்ளது என அறிவித்தனர். இதன்படி ராமநாதபுரம் நகராட்சியை சுற்றியுள்ள பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரங்கோட்டை, பேராவூர், ஆர்.எஸ்.மடை, அச்சுந்தன்வயல், கூரியூர், புத்தேந்தேல் ஆகிய ஊராட்சிகளை இணைத்து 10 கி.மீ., சுற்றளவில் மாநகராட்சியாக்கவும், 60 வார்டுகள் வரையறை செய்யவும் திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் எந்த வித மான குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. இன்றும் ஒரு கிராமம் போலவே உள்ளது. நகரில் குடிநீர் பற்றாக்குறை, பாதாள சாக்கடை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு அறிவித்தப்படி மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகரின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டில் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர் நியமனம் செய்து புதிய பஸ் ஸ்டாண்டை தவிர்த்து, நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிழக்கு கடற்கரை சாலை கீழக்கரை ரோட்டில் வெளியூர் பஸ்கள் நகருக்கு வராத வகையில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். தொழிற்பேட்டையில் அதிகளவில் தொழிற்சாலை துவங்கவும், மீன்கள், வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த வணிக மையங்களும் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் நகராட்சியை விரிவுப்படுத்துவதற்கான ஊராட்சிகள் இணைப்புகள் குறித்து நகரமைப்பு அலுவலர் மூலம் வரைபடம் தயார் செய்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். இதன் மூலம் கூடுதல் வருமானம், அரசு நிதி கிடைக்கும். கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் மாநகராட்சி அலுவலகம் அமைக்கவும் திட்டம் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் மநாகராட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை