போதுமான டிக்கெட் விற்பனை இல்லை; எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாம்பனில் நிற்காது
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன், மண்டபம் ரயில் நிலையத்தில் போதிய அளவில் டிக்கெட் விற்பனை ஆகாததால் ராமேஸ்வரம்--தாம்பரம் விரைவு ரயில், திருவனந்தபுரம் -ராமேஸ்வரம் அமிர்தா விரைவு ரயிலை நிறுத்த முடியாது என ரயில்வே தெரிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்திற்கு தினசரி விரைவு ரயில் சேவை கடந்த ஏப்ரலில் துவங்கி வைக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்பட்ட அமிர்தா விரைவு ரயில் அக்., முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த இரு ரயில்களும் ராமேஸ்வரத்தில் புறப்பட்டு அடுத்த நிறுத்தமாக ராமநாதபுரத்தில் நிற்கிறது. இதனால் ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கிராமங்களைசேர்ந்த மக்கள் பாம்பன் அல்லது மண்டபத்தில் நிறுத்தம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த மண்டல ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தாம்பரம்--ராமேஸ்வரம் விரைவு ரயிலை பாம்பனில் நிறுத்துமாறும், திருவனந்தபுரம் --ராமேஸ்வரம் அமிர்தா விரைவு ரயிலை மண்டபத்தில் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 'இரு ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் பயணிகள் ஏறுவதில்லை. ரயில்வே வாரியம் விரைவு ரயிலை நிறுத்துவதற்கு நிர்ணயித்துள்ள சராசரி டிக்கெட் விற்பனையை விட குறைவான டிக்கெட் தான் விற்பனையாகிறது. இதனால் நிறுத்தம் வழங்க முடியாது' என ரயில்வே பதில் அளித்துள்ளது.