முதுகுளத்துார் வட்டாரத்தில் மிளகாய் நாற்று வளர்க்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் வட் டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் நாற்று வளர்ப்பில் தீவிரம் காட்டுகின்றனர். முதுகுளத்துார் வட் டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தபடியாக மிளகாய், பருத்தி உள்ளிட்ட சிறுதானியப் பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நஷ்டம் ஏற்பட்டது. தற்போது விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நெல் விதைகள் விதைத்து விவசாயத்தை துவக்கி உள்ளனர். முதுகுளத்துார் அருகே காக்கூர், கருமல், கீழத் துாவல் புளியங்குடி, தேரிரு வேலி, இளஞ்செம்பூர், பூக்குளம், அப்பனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தின் ஓரத்தில் மிளகாய் நாற்று வளர்ப்பதற்காக சுத்தம் செய்து விதைகள் விதைத்துள்ளனர். தினந்தோறும் காலை மாலையில் தண்ணீர் தெளித்து வந்த நிலையில் மிளகாய் நன்கு வளரத் துவங்கியது. கால்நடைகளில் இருந்து மிளகாய் நாற்றுகளை பாதுகாப்பதற்காக மூடிவைத்து உள்ளனர். அதன் பிறகு மிளகாய் நாற்று பிடுங்கி நிலத்தில் நட்டு வைத்து விவசாயம் செய்யப்படும் என்று விவசாயிகள் கூறினர்.