பயிர்காப்பீட்டு தொகை வரவில்லை என கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்
ராமநாதபுரம்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட 10க்கு மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஓரியூர், பனைக்குளம், மேலக்கிடாரம், கோட்டையேந்தல், தனிச்சியம் குரூப்பை சேர்ந்த சேரந்தை, குசவன்குளம், சேனாங்குறிச்சி, கொத்தங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார 10 கிராமங்களில் 5000 ஏக்கருக்கு அதிகமாக விளைநிலங்களில் நெல் விவசாயம் செய்தனர். பருவம் தவறி பெய்த கனமழையால் அனைத்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்ததுடன், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.தற்போது பயிர் காப்பீடுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.470 முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட கிராமங்களுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கவில்லை. உடனடியாக வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு தங்களுக்கு விரைவில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கையை விசாரித்து பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.