மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கட்டட கூரை இடிந்து விழுந்ததால் அச்சம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணைய கட்டடத்தின் கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் நுாலிழையில் உயிர் தப்பினர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேறு இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலகங்களும், நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக பழைய கேண்டின் கட்டடத்தின் பின்பகுதியில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகிறது. இந்த கட்டடம் 1988ல் இரு தளங்களுடன் கட்டப்பட்ட நிலையில் தற்போது 37 ஆண்டுகளை கடந்துள்ளது. இதன் முன்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குகள் வாரத்தில் இருநாட்கள் மட்டும் விசாரணை நடக்கிறது. மற்ற நாட்களில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தின் கூரை பெயர்ந்து மேஜையின் முன்பு விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடத்தில் பெரும்பாலான பகுதி இடிந்து விழும் நிலையிலும், செடிகள் முளைத்தும், கான்கிரீட் கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்தும் உள்ளது. காலாவதியான கட்டடத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். மாற்றுக் கட்டடம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.