உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் 11வது நாளாக ஸ்டிரைக்

மீனவர்கள் 11வது நாளாக ஸ்டிரைக்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 11வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதால் ரூ.10 கோடி மதிப்பில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைச்சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆக., 11 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ஆக., 19ல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நேற்றுடன் 11வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் ராமேஸ்வரம் கடலோரத்தில் உள்ள டீக்கடைகள், லேத், பட்டறைகள் மூடப்பட்டன. மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. இதன்படி ஸ்டிரைக் துவங்கி நேற்றுடன் 5 முறை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிலையில் ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வீதம் ரூ.10 கோடி மதிப்பில் மீன் வர்த்தகம் இல்லாமல் முடங்கியுள்ளது. இதனால் மீனவர்கள், மீன்பிடி சார்பு தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் ராமேஸ்வரம் பகுதியில் முற்றிலும் மீன்பிடிக்க முடியாமல் போகும். இதனால் ரூ.பல கோடி மதிப்புள்ள 600 படகுகளை என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி இருப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். சிறைக்காவல் நீட்டிப்பு ஆக.,9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் ஒரு படகில் இருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று 7 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீனவர்களுக்கு ஆக., 26 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ