மீன்பிடி தடையால் தனுஷ்கோடி கரைவலை மீனுக்கு மவுசு
ராமேஸ்வரம்: மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை உள்ளதால் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தனுஷ்கோடி கரைவலையில் சிக்கும் மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் 8000 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.தடைக்காலம் துவங்கி 5 நாட்கள் ஆன நிலையில் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதியில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நாட்டுப்படகில் சிக்கும் மீன்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.இந்நிலையில் தனுஷ்கோடியில் உள்ள மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் பாரம்பரிய கரைவலையில் மீன்பிடிப்பதில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். 200 மீ., நீளமுள்ள இந்த வலையை கடலில் ஆங்கில 'யு' வடிவில் வீசிவிட்டு வலையின் இருமுனையை இரு பகுதியாக பிரித்து கரையில் நிற்கும் மீனவர்கள் இழுப்பார்கள். இம்மீன்கள் கரைக்கு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் மார்க்கெட்டுக்கு வந்து விடும். இதனால் இம்மீனுக்கு ருசியும், மவுசும் அதிகம். இதில் சிக்கும் நகரை மீன், வெளமீன், கணவாய் மீன், ஊடகம் மீன்களை கிலோ ரூ.300க்கு விற்பார்கள். தற்போது மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இம்மீன்களை கிலோ ரூ.400க்கு விற்கின்றனர். வேறு வழியின்றி மீன் பிரியர்கள் கரைவலை மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.