ராமேஸ்வரம் அருகே தடை செய்த மடியில் மீன்பிடிப்பு: மீன்துறை வழக்கு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த இருபடகின் உரிமையாளர்கள் மீது மீன்துறையினர் வழக்கு பதிந்தனர்.கடல் வளம், மீன்வளத்தை அழிக்கக்கூடிய இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், பகுதியில் ஜன., முதல் ஏப்.,15 வரை தடை செய்த இரட்டைமடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் இருபடகுகள் இணைந்து இரட்டை மடியில் மீன்பிடித்து மீனவர்கள் கரை திரும்பினார்கள். தகவலறிந்த மண்டபம் மீன்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், அதிகாரிகள் இரு படகையும் பிடித்து உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்தனர். இப்படகிற்கு மீன்பிடி அனுமதி டோக்கன், மானிய டீசல் ரத்து செய்யப்பட்டு மீன்துறை துணை இயக்குநர் அபராதம் விதிக்கும் வரை இருபடகுளிலும் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது.