உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவில் நாகநாதசுவாமி வைகாசி வசந்த விழா கொடியேற்றம்

நயினார்கோவில் நாகநாதசுவாமி வைகாசி வசந்த விழா கொடியேற்றம்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பரமக்குடியில் இருந்து 12 கி.மீ.,ல் நயினார்கோவில் உள்ளது. இங்கு சவுந்தர்யநாயகி, நாகநாத சுவாமி அருள் பாலிக்கின்றனர். கோயிலில் மே 30 இரவு அணுக்ஞை, வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை சுவாமி சன்னதியில் 8:30 மணிக்கு நந்தி கொடியேற்றப்பட்டு வசந்த விழா துவங்கியது. பின்னர் அபிஷேகம், மகாதீப ஆராதனை நடத்தப்பட்டது. இரவு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். தினமும் காலை, இரவு இந்திர விமானம், நந்தீஸ்வரர், ஹம்சம், பூத, சிம்ம, யானை, கைலாச, கிளி வாகனங்களில் சவுந்தர்யநாயகி மற்றும் பிரியா விடையுடன் நாகநாத சுவாமி வீதி உலா வர உள்ளனர். ஜூன் 5 காலை திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 7ல் நடராஜர் இந்திர விமானத்தில் வலம் வருகிறார். அன்று திருமுறை பட்டயம் வாசித்தல், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடல் தீர்த்தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். ஜூன் 8 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். இரவு சேஷ, காமதேனு வாகனங்களில் புறப்பாடு நடக்கும். ஜூன் 9 காலை தீர்த்தவாரி, இரவு சப்தாவர்ணம் நடக்க உள்ளது. தொடர்ந்து கங்காள நாதர், சண்டிகேஸ்வரர் விழாவும், ஜூன் 12 காலை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை