வெள்ளக்காடானது ராமநாதபுரம் வடிகால் வசதியின்றி குடியிருப்புகளை சூழ்ந்தது மழை நீர்
ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரமான ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஊருணிகளுக்கு செல்லும் வரத்து கால்வாய்கள் பராமரிக்கப்படாத நிலையில் தொடர் மழையால் வெள்ளக்காடான நிலையில் குடியிருப்பு பகுதிகள், ரோடு, அலுவலக வளாகங்களை சூழ்ந்தது. மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்., மாதம் துவங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக இரவு, பகல் என தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், சந்தைக்கடை ரோடு, மதுரை ரோடு, பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகம், ஓம்சக்திநகர், சேதுபதிநகர், பாரதிநகர், சக்கரகோட்டை, ஆத்மநாதசாமி நகர், ரயில்வே பீடர் கீழக்கரை பாலம், அரசு போக்குவரத்து பணிமனை, பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் செல்வதற்கான வடிகால்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மழைநீர் குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் உழவர்சந்தை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், வியாபாரிகள், மக்கள் சிரமப்பட்டனர். அல்லிக்கண்மாய் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் பாதாள சாக்கடை நீரும் சேர்ந்து ரோட்டில் ஆறாக ஓடியதால் துர்நாற்றத்தால் மக்கள் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர்.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு உறிஞ்சு வாகனங்கள் மூலம் தண்ணீரை அகற்றஉத்தரவிட்டார். இருப்பினும் ராமநாதபுரத்தில் மழைக்காலத்தில் தண்ணீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.