பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ராமநாதபுரம் : விஜயதசமி, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பூஜைப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் விஜயதசமி இன்று (அக்.1) கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்கள் பூஜை பொருட்களின் விலை 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள சந்தையில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று காலை முதல் கூட்டம் அதிகரித்தது. கிலோ மல்லிகை சாதாரண நாட்களில் ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகும். நேற்று மல்லிகை சில்லரை விற்பனையில் ரூ.2000, மொத்த விலையில் ரூ.1500 க்கும் விற்கப்பட்டது. முல்லை ரூ.800 க்கும், செண்டு பூ ரூ.60க்கும், ரோஜா, செவ்வந்தி தலா ரூ.300 க்கும் விற்பனையாகின. வாழை இலை அடுக்கு (5 இலை) ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கப்பட்டது.