காவிரி குழாய்களில் அடிக்கடி ஏற்படும் உடைப்பால் குடிநீர்.. வீணாகுது; திட்ட அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு அவசியமாகிறது
ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகிறது. இதனால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மாவட்டத்தின் பெரும்பான்மையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 2009 ம் ஆண்டில் ரூ.616 கோடியில் ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முத்தரசநல்லுார் பகுதி காவிரி ஆற்றில் 4 ராட்சத கிணறுகள், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்த குடிநீர் பகுதிவாரியாக 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் குழாய்கள் அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. அதிலும் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல் உடனே அலுவலர்களின் கவனத்திற்கு வராமல் போவதால் நீண்ட நாட்கள் குடிநீர் வீணாகும் அவல நிலை உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவுடையார்புரம், கூரியூர், பாம்பன் பாலம், ராமநாதபுரம் நகர் பகுதிகள் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகியுள்ளது. இவ்வாறு குடிநீர் வீணாகி வரும் நிலையில் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. டேங்கரில் விற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி செல்வதும், குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை மணிக்கணக்கில் காத்திருந்து சேகரிப்பதிலும் மக்களின் பாதி நாட்கள் செல்வதாக தெரிவிக்கின்றனர். மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் குழாய்களின் உடைப்பு வழியாக குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்படும் உடைப்பை அதிகாரிகள் உடனுக்குடன் கண்காணித்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.