ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிய பேரன்; மீட்டுத்தரக் கோரி தாத்தா போலீசில் புகார்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிய பேரன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தரக் கோரி தாத்தா எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.ராமேஸ்வரம் மல்லிகை நகரைச் சேர்ந்தவர் குப்பபிச்சை 75. இவருக்கு ஜெயராணி, முருகேஸ்வரி ஆகிய மகள்கள் உள்ளனர். குப்பபிச்சை மனைவி சிவகோமதி, மூத்த மகள் ஜெயராணி ஆகியோருடன் ராமநாதபுரம்எஸ்.பி., சந்தீஷ் இடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து குப்பபிச்சை கூறியதாவது:எனது மகள்வழி பேரன் தில்லை ராம்குமார் என்னை கண் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரசமாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லலாம் என்றார். அங்கு நண்பரின் சொத்திற்காக சாட்சி கையெழுத்திட வேண்டும் எனக்கூறி ஏமாற்றி எனது 1 ஏக்கர் 25 சென்ட் நிலத்தை பவர் எழுதி வாங்கினார். மேலும் நான் வெளிநாட்டில் உள்ளதாக கூறி வேறு நபருக்கு கடந்த மாதம் விற்றுள்ளார்.இந்த விஷயம் தற்போது தான் தெரிய வந்தது. நிலத்தை எனது இரு மகள்களுக்கும் எழுதி வைக்க இருந்த நிலையில் எனது மகளுக்கு (ஜெயராணி) கூட தெரியாமல் பேரன் ஏமாற்றி பதிவு செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார்.