ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் தொடக்கம்
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகளை ஓ.என்.ஜி.சி. துவங்கியுள்ளது. இம் மாவட்டங்களில் 1403 சதுர கி.மீ., பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் சோதனை கிணறுகள் அமைக்க 675 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேவிபட்டினம் அருகே மாதவனுார் பழைய மங்கம்மாள் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக ஓ.என்.ஜி.சி. சார்பில் இத்திட்டத்திற்கு இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன், ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிலையில், பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.