உரக்கடைகளில் விலைப்பட்டியல் இன்றி கூடுதலாக விற்றால்.. லைசென்ஸ் கட்: சம்பா சாகுபடிக்கு 44,000 டன் உரம் இறக்குமதி செய்ய திட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையைக் கொண்டு உழவுப்பணிகள் துவங்கியுள்ளன. நடப்பு ஆண்டில் 44 ஆயிரம் டன் யூரியா, டி.ஏ.பி., உள்ளிட்ட உரங்கள் இறக்குமதி செய்யப்படும். விலை பட்டியல் இன்றி கூடுதலாக விற்றதால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் துறை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையை நம்பியே 3 லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் விரும்பும் நெல் ரக விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்பா பருவ பயிர் சாகுபடியை எதிர் நோக்கி அக்.,2025 முதல் மார்ச்- 2026 வரை தேவைப்படும் உரங்கள் மாத வாரியாக கணக்கிட்டு உரத்தேவைத் திட்டம் வேளாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி யூரியா- 23,000 டன், டி.ஏ.பி.,-7000 டன், பொட்டாஷ்-1100 டன், காம்ப்ளக்ஸ் - 12,000 டன், சூப்பர் பாஸ்பேட் 1250 டன். தற்சமயம் யூரியா 2603 டன், டி.ஏ.பி. 526 டன், பொட்டாஷ் 103 டன், காம்ப்ளக்ஸ் 1933 டன் என 5165 டன் உரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து தனியார் சில்லரை உர விற்பனையாளர்களுக்கும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு உர விற்பனை தொடர்பாக 1985ம் ஆண்டு உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அனைத்து சில்லரை உர விற்பனையாளர்கள் தங்கள் விற்பனை நிலையங்களில் உர இருப்பு மற்றும் விலைப்பட்டியல் வைக்கவும், “ஆ” படிவ விற்பனை ரசீது வழங்கவும் விவசாயிகளிடம் ஆதார் அட்டை பெற்று, பயிர் சாகுபடிக்கு ஏற்ப விவசாயிகள் கோரும் உரங்களை மட்டும் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் விற்பனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிக பட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்களின் உர உரிமத்தை ரத்து செய்வதுடன், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாவட்டங்களிலிருந்து வந்து ஆய்வு மேற்கொண்டு உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 விதியை மீறிய 12 விற்பனை நிலையங்கள் மீது 7 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை விற்பனை தடைஆணை வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற விதிமீறல்கள் மீண்டும் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கர மணியன் எச்சரித்துள்ளார்.