அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு நுாறு சதவீதம் தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார். அரசு செயலாளரான மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் வள்ளலார் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது: ஆசிரியர்கள் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கற்றல் திறன்களின் அடிப்படையில் கற்றல் நிலையை அடையாளம் கண்டு அதற்கேற்ப கற்பிக்கவும், அவர்களுக்கு தேவையான தேர்வை நடத்த வேண்டும். 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், தேர்ச்சி பெற கஷ்டப்படும் மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் பெற தேவையான எளிய யுக்திகளை கையாள வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமுடன் கற்பிப்பதன் மூலம் மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைந்திடும் என்றார். நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்கள் தங்களது அனுபவத்தை பரிமாறிக் கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.