5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள அரசு பஸ்சை இயக்க வலியுறுத்தல்
முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி, மட்டியாரேந்தல், சத்திரக்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சேவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.மட்டியாரேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 2017--18ம் ஆண்டு முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி, மட்டியாரேந்தல், சத்திரக்குடி வழியாக ராமநாதபுரத்திற்கு காலை, மாலை என இரு முறை அரசு பஸ் இயக்கப்பட்டது. பின்பு கொரோனா தொற்று காலத்தில் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நிறுத்தப்பட்ட அரசு பஸ் இயக்கப்படவில்லை. இதுகுறித்து லுார்து மனுவேல் கூறியதாவது, மட்டியாரேந்தல் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. எனவே அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.