நெடுஞ்சாலையில் வெள்ளை கோடுகள் போட வலியுறுத்தல்
திருவாடானை : நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்கும் வெள்ளைக் கோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நெடுஞ்சாலைகளில் ரோடு மார்க்கர் என கூறப்படும் வெள்ளைக் கோடுகள் விபத்தை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும் விபத்தில்லா பயணங்களை உருவாக்கும் வகையில் ரோடுகளில் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டிருக்கும். திருவாடானை அருகே மங்களக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடுகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:தேவகோட்டை மற்றும் திருவாடானை நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த ரோட்டில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வெள்ளைக் கோடுகள் போடப்பட்டுள்ளது. குருந்தங்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் ரோட்டில் வெள்ளைக் கோடுகள் இல்லை. இந்த வெள்ளைக் கோடுகள் இருக்கும் பட்சத்தில் வளைவான பகுதியில் வாகனங்கள் திரும்பவும், வேகத்தடையில் வெள்ளைக் கோடுகளை பார்த்து வேகத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. எனவே தேவகோட்டை மற்றும் திருவாடானை நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளைக் கோடுகள் இல்லாத இடங்களை ஆய்வு செய்து அந்த இடங்களில் கோடுகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.