நோயாளிகளின் உயிர் காக்கும் மாத்திரைகளுக்கு... தட்டுப்பாடு: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், பரமக்குடி சுகாதார மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்பகுதிகளில் மார்பக புற்று நோய் சோதனை செய்யப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதில் மார்பக புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சையில் வழங்கப்படும் 'டாமோக்சிபென்' என்ற மாத்திரை இல்லாததால் நோயாளிகளை வெளியில் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர். இதே போல் பல்வேறு உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் வெளியில் வாங்கி பயன்படுத்த நோயாளிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். கடுமையான காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி நிவாரணி போன்ற மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும் போது அவர்களுக்கு மருந்துகளால் வயிற்றில் புண் ஏற்படும். இதனை தவிர்க்க 'பான்டோபிரசோல்' என்ற ஊசி மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும். இந்த ஊசி மருந்தும் இல்லை. இது போன்று ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைகளுக்கானமருந்து, மாத்திரைகள் இல்லாததால் ஏழை நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களுக்கு சப்ளை இல்லை என்பதால் இந்த மருந்து, மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர். அரசு நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.