கலெக்டர் அலுவலகத்தில் பெயரளவு குடிநீர் வசதியால் காட்சிப்பொருளாக உள்ள சுத்திகரிப்பு இயந்திரங்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட புதிய, பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெயரளவில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு இயந்திரங்கள் சரிவர செயல்படாமல் அடிக்கடி பழுதாகி காட்சிப் பொருளாக உள்ளதால் அலுவலர்கள், பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் பழைய, புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டடத்தில்மாவட்ட கருவூலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகங்கள் என பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்படுகிறது.உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து அலுவலர்கள், பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இவை சரிவர பராமரிக்கப்படாமல் பழைய, புதிய கலெக்டர் அலுவலகங்களில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதாகி குடிநீர் வராமல் காட்சிப்பொருளாக மாறியுள்ளன. இதனால் அலுவலர்கள், பொது மக்கள் கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் குடிநீருக்காக தவிக்கின்றனர். எனவே பழைய, புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு இயந்திரங்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் கூடுதலாக குடிநீர் தொட்டி வைக்கவும்சம்பந்தப்பட்ட பட்டணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.