அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியில்லை: சுகாதாரம் கேள்விக்குறி
திருவாடானை; திருவாடானை அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கான கழிப்பறைக்குள் யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 40 உள் நோயாளிகள் தங்க இடமிருந்தும் 10 முதல் 15 பேர் மட்டுமே தற்போது தங்கியுள்ளனர். இங்கு தங்கியுள்ள உள் நோயாளிகளுக்கு ஆண்கள், பெண்கள் தனித்தனியாக ஐந்து அறை கொண்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கான மூன்று கழிப்பறைகளில் யாரும் உள்ளே நுழைந்து விடாதபடி கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை பணியாளர்கள் கூறுகையில், போதிய தண்ணீர் வசதியில்லை. இதனால் கழிப்பறையை கயிற்றால் கட்டி வைத்துள்ளோம். துாய்மை பணியாளர்கள் இல்லாததால் மருத்துவமனை கழிப்பறையை சுத்தம் செய்ய முடியவில்லை என்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. நோயாளிகள் புகார் தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு, அலைபேசி எண் 73581 27742 எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆக உள்ளது. தண்ணீர் வசதியின்றி கழிப்பறைகளை பயன்படுத்த முடியவில்லை.ஸ்கேன் கருவி இருந்தும் தொழில் நுட்ப பணியாளர் இல்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. நோயாளிகளிடம் பணியாளர்களின் அணுகுமுறை எரிச்சலுடன் இருப்பதால் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கழிவுகள் முறையாக அகற்றுவதில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் நோயாளிகள் தவிக்கின்றனர் என்றனர்.