பனைக்குளத்தில் இயற்கை எரிவாயு குழாயில் கசிவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் கிராமத்தில் தரையில் பதிக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி., ஊழியர்கள் கசிவை சரி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி., சார்பில் இயற்கை எரிவாயு பூமிக்கு அடியில் இருந்து சேகரிக்கப்பட்டு குழாய் மூலம் இயற்கை எரிவாயு சேமிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், சேமிப்பு நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கும் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுவதால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், நேற்று காலை தேவிபட்டினம் பனைக்குளம் அருகே சோகையன்தோப்பு மங்கம்மாள் சாலை பகுதியில், ரோட்டோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் இருந்து இயற்கை எரிவாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மாலையில், உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.