ரயில் நிலையத்தில் பூட்டியுள்ள கழிப்பறை : பயணிகள் அவதி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கழிப்பறை பூட்டி இருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, மதுரை மட்டுமின்றி, பெராஸ்பூர், ஓகா, ஹீப்ளி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ராமநாதபுரத்தை சுற்றியுள்ள திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ராமநாதபுரம் வந்து செல்லவேண்டும். தினமும் ஏராளமான பயணிகள் ரயில்நிலையத்தை பயன்படுத்துகின்றனர். பயணிகள் பயன்படுத்துவதற்காக ரயில்நிலையத்தின் இருபுறமும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் கட்டண கழிப்பிடம் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. முதல் நடைமேடையில் உள்ள கழிப்பறை எப்போதும் பூட்டியிருப்பதாகவும், பலர் கழிப்பிடத்தின் அருகே சிறுநீர் கழிப்பதால் அப்பகுதி துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர். கழிப்பறைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.