கோயில் அம்மன் நகையை திருடி குளத்தில் குதித்து தப்பியவர் கைது
திருவாடானை:தொண்டி அருகே முத்துமாரியம்மன் சிலையில் இருந்த நகையை திருடி விட்டு குளத்தில் குதித்து தப்பியவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ஓடவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. டிச.11 மாலை 3:00 மணிக்கு பூஜாரி கணேசன் கோயிலை திறக்க சென்ற போது இரண்டு பேர் அம்மன் சிலையில் இருந்த தங்க காசுகள் உட்பட ஆறு பவுன் நகையை திருடிவிட்டு டூவீலரில் தப்பினர்.பூஜாரியின் சத்தம் கேட்டு கிராம மக்கள் அவர்களை விரட்டிச் சென்றனர். தொண்டி போலீசார் ஜீப்பில் துரத்தினர். திருடர்கள் தொண்டி வழியாக திருவாடானை பஸ்ஸ்டாண்டிற்கு சென்ற போது போலீசார் பிடித்தனர்.இதில் திருவாரூர் மா வட்டம் கீழக்காடு எம்.கே.நகரை சேர்ந்த அறிவழகன் 33, கைது செய்யப்பட்டார். ஆனால் நகையுடன் இருந்த மற்றொருவர் சூச்சனி அருகே உள்ள குளத்தில் குதித்து தப்பிச் சென்றார். அவர் மன்னார்குடி பெருகவால்தானை சேர்ந்த ஆனந்தன் 44, எனத் தெரிந்தது. நேற்று அவரை இன்ஸ்பெக்டர் சவுந்திரபாண்டியன் கைது செய்து நகையை மீட்டார்.