ஆந்திரா, கர்நாடகாவில் மணக்கும் மண்டபம் மல்லிகை நாற்றுகள்
ராமநாதபுரம்; மண்டபம் பகுதியில் வளர்க்கப்படும் மணக்கும் மல்லிகை நாற்றுகள் ஆந்திரா, கர்நாடகாவிற்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.மண்டபம் அதனை சுற்றியுள்ள கிராமங்களான நொச்சியூரணி உட்பட பல கிராமங்களில் மல்லிகை நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.பல்வேறு மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் மண்டபம் பகுதியில் இருந்து தான் மல்லிகை நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர்.மல்லிகை நாற்று விவசாயி மெய்கண்டன் கூறியதாவது:மண்டபம் பகுதியில் உள்ள மணற்பாங்கான நிலங்கள் அதில் மல்லிகை நாற்றுகள் அதிகம் வளர்வதற்கான சீதோஷ்ண நிலை உள்ளது. இதனால் தாய் செடியில் இருந்து கவாத்து செய்யப்பட்டு அதிலிருந்து நாற்றுகள் தயாரித்து வருகிறோம். ஒரு நாற்று முழுமையாக வளர நான்கு மாதங்கள் வரை ஆகும். தற்போது ஒரு நாற்று ரூ.4க்கு விற்பனை செய்கிறோம்.பெரும்பான்மையான நாற்றுகள் ஆந்திரா, கர்நாடகா பகுதிக்கு செல்கின்றன. கேரளாவில் இருந்தும் சிலர் மல்லிகை நாற்றுகள் வாங்கிச் செல்கின்றனர். மதுரை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.ஒரு நாற்று ரூ.5 க்கு விற்றால் தான் லாபம் கிடைக்கும். 4 ரூபாய் என்பது வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும் என்றார்.