போக்குவரத்திற்கு லாயக்கற்ற மென்னந்தி-அரசநகரி ரோடு
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரசநகரி கிராம ரோடு பயன்படுத்த முடியாத அளவில் சகதிக் காடாகி இருப்பதால் மக்கள் விபத்து அச்சத்தில் பயணம் செய்கின்றனர். சத்திரக்குடி ரோட்டில் இருந்து மென்னந்தி கிராமம் செல்ல வேண்டும். இப்பகுதியில் மென்னந்தி விலக்கு ரோட்டில் அரசநகரி கிராமம் உள்ளது. இங்கு நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தொடர்ந்து விலக்கு ரோட்டில் கால்வாய் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணி 6 மாதங்களாக நடந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில் சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் வழக்கம் போல் போக்குவரத்து பாலத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி செல்லும்படி இருக்கிறது. தற்போது பெய்த மழையால் ஒட்டுமொத்தமாக சகதிக் காடாகி உள்ளதால் தினமும் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் விபத்து அச்சத்தில் பயணம் செய்கின்றனர்.மேலும் டூவீலர், ஆட்டோ என வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். எனவே உடனடியாக ரோட்டை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.