வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: சட்டமாக்க கோரி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் தாலுகா தலைவர் பேச்சி முத்து தலைமை வகித்தார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மதுரை மண்டல தலைவர் மதுரை வீரன், முல்லை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், துணைச் செயலாளர் விஜயன், ராமநாதபுரம் தாலுகா செயலாளர் சத்தியராஜ், தொழிற்சங்க தலைவர் களஞ்சியம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். முல்லை பெரியாறு அணையின் கீழ் உள்ள பேபி அணையை சீரமைத்து அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.வைகை அணையில் உள்ள 22 அடி உயர களிமண்ணை உடனடியாக அகற்ற வேண்டும்.சூரன்கோட்டை, களத்தாவூர், புத்தேந்தல், முதுநாள், அச்சுந்தன்வயல் ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.