ராமநாதபுரத்தில் காணாமல் போன அலைபேசிகள் மீட்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொலைந்துபோன 100 அலைபேசிகளை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்அவற்றை உரிமையாளர்களிடம் எஸ்.பி., சந்தீஷ் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2024ல் 582 அலைபேசிகள் சைபர் கிரைம் பிரிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நடப்பாண்டில் தொலைந்து போன 800 அலைபேசிகளில் ஏற்கனவே 300 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மேலும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். சைபர் கிரைம் புகார்களை 1930 என்ற இலவச தொலைபேசி, www.cybercrime.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். சிட்பண்ட் போன்ற போலி நிறுவனம் நடத்தி பணத்தை மோசடி செய்கின்றனர். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போலி முகநுால், வங்கி கணக்கில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பணம் செலுத்தும் முன்பு நண்பர்கள், உறவினர்களிடம் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.