மழையால் சேதமடையும் ரோடுகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் மழையால் ரோடுகள் சேதம் அடையும் நிலையில் உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். பரமக்குடிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது லேசான மற்றும் கனமழை பெய்து வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட ரோடுகள் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சேதமடைகிறது. இதேபோல் பரமக்குடி நெடுஞ்சாலைகளில் தண்ணீர் செல்ல வழியின்றி ரோடு சேதம் அடைவது தொடர்கிறது. இதனால் வாகனங்கள் முறையாக செல்ல வழியின்றி கவிழும் நிலை ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ரோடுகளை ஒவ்வொரு பகுதியிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் நிலையில் சிறு மழைக்கு தாங்காத சூழலில் இதனை ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடையும் ரோடுகளை குறைந்தபட்சம் உடனுக்குடன் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.