வீட்டின் முன் இட்லி, மாவு விற்போரிடம் வசூல் கூடாது நகராட்சி கூட்டத்தில் விவாதம்
பரமக்குடி : வீட்டின் முன்பு இட்லி, மாவு விற்பவர்களிடம் வரி வசூல் செய்யக்கூடாது என்று பரமக்குடி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.பரமக்குடி நகராட்சி கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் குணா, நகராட்சி கமிஷனர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:முதல் நிலை நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் அதிக பணம் விரையம் ஆகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்ட பணிகள் பல நிறைவு பெறாமல் இருக்கிறது.தெருவோர கடைகளுக்கு தினசரி வசூல் செய்வோர் வீட்டின் முன்பு அரிசி மாவு, இட்லி விற்பவரிடம் வசூல் செய்கின்றனர். இதை தடுக்க வேண்டும். தெருவில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும். வரி வசூல் செய்ய வருவோர் வட்டி வசூல் செய்வது போல் பேசுகிறார்கள்.நகராட்சி சர்வேயர் எப்போது வந்தாலும் இருப்பது கிடையாது. தரைப்பாலம் சீரமைத்து சில மாதங்களில் ரோடு உடைந்துள்ளது.பல ஊருணிகள் துார்வாரப்பட்ட நிலையில் அவற்றை பராமரிப்பது கிடையாது. பெருமாள் கோயில், கள்ளழகர் தெருவில் ரோடு சேதமடைந்துள்ளது. புதிய வீடு கட்டுவோருக்கு வரி ரசீது தாமதமாக கொடுக்கின்றனர்.தலைவர் மற்றும் கமிஷனர்: வரும் நாட்களில் சித்திரை திருவிழா வைகை ஆற்றில் நடக்க உள்ளதால் காட்டு பரமக்குடி தொடங்கி நாணல், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். வாறுகால் 50 கி.மீ., அளவிற்கு சீரமைப்பதுடன், புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. புதிய வீட்டு வரி விண்ணப்பித்த இரண்டு மாதத்தில் வழங்க ஆவண செய்யப்படும் என்றனர்.