தொண்டியில் புதிய நுாலக கட்டடம்: முதல்வர் திறந்தார்
தொண்டி: தொண்டி சத்திரம் தெருவில் அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. கட்டடம் சேதமடைந்ததால் நுாலகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சேதமடைந்த நுாலக கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர்ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கட்டடம் இடிக்கப்பட்டது. ஆனால் 10 சென்ட் இருக்க வேண்டிய இடத்தில் ஆக்கிரமிப்பால் 3 சென்ட் மட்டுமே இருந்தது. இதனால் ஆக்கிரமிப்பபை அகற்றக் கோரி கலந்தர்ஆசிக் தாசில்தாருக்கு மனு அனுப்பினார். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கட்டடம் கட்ட தாமதம் ஏற்பட்டதால் கலந்தர் ஆசிக் கட்டடம் வேலையை துவக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நுாலகம் கட்டும் பணி முடிந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது. நேற்று ராமநாதபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் தொண்டி நுாலக கட்டடத்தை திறந்து வைத்தார். இதற்கான விழா நேற்று காலை நுாலக கட்டத்தில் நடந்தது.