கார், வேன் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை, சிறுமி பலி
ராமநாதபுரம் : கடலுார் மாவட்டம், காட்டுப்பரூரை சேர்ந்த 22 பேர், ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய வேனில் வந்தனர். விருத்தாசலத்தை சேர்ந்த சிவக்குமார், 28, வேனை ஓட்டினார். எதிரே, ராமநாதபுரம் நோக்கி, நான்கு நண்பர்களுடன், 'போர்டு பிகோ' காரில் கீழக்கரையை சேர்ந்த ஐ.டி., ஊழியரான வெங்கடேஸ்வரன், 27, வந்தார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்கவிருந்தது.இரு வாகனங்களும் அதிகாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரம் ரோட்டில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், வெங்கடேஸ்வரன், வேனில் வந்த காட்டுப்பூர் சத்யா மகள் மகாலட்சுமி, 12, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.உச்சிப்புளி போலீசார், காயமடைந்த 24 பேரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காரில் பயணித்த தஞ்சாவூரை சேர்ந்த பழனிவேல், 21, உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.