உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்

ஊட்டச்சத்து திட்டம் சரிவர செயல்படவில்லை அதிகாரிகள் பாராமுகம் ; சத்துமாவு, முட்டை பெயரளவில் வினியோகம்

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, கமுதி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களில் மத்திய அரசின் தேசிய ஊட்டசத்து (போஷன் அபியான்) திட்டத்தை சரிவர செயல்படுத்துவது இல்லை. சத்து மாவு, முட்டை பெயரளவில் வழங்கப்படுகிறது. இவற்றை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 2018 முதல் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே திட்டத்தில் 'போஷன் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப் படுகிறது. 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் ஆகியோருக்கு சத்து மாவு, முட்டை ஆகியவற்றை வழங்குகின்றனர். எடை குறைவான குழந்தைகளுக்கு முதல்வரின் சிறப்பு திட்டமான ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தில் 'நியூட்ரிஷன் பிஸ்கட்' வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. பல இடங்களில் குழந்தைகளின் பெற்றோர், பள்ளிகளில் படிக்கும் வளரிளம் பெண்களுக்கு சத்து மாவு, முட்டை உள்ளிட்டவை முறையாக வழங்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். கமுதி பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் வேலவன் கூறியதாவது: அங்கன்வாடி மையங்களில் கிடைக்கும் சத்துமாவு உள்ளிட்டவைகளை சில கிராமங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். முட்டைகள் வெளி மார்க்கெட்டிலும் விற்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி முறையாக எடுப்பதில்லை. எனவே அரசின் திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்றார். இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறுகையில், அங்கன்வாடி மையத்திற்கு வரும் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை முறையாக கணக்கெடுத்து ஊட்டசத்து மாவு, முட்டை வழங்கப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் இருப்பு நோட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஏதேனும் தவறு தெரியவந்தால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை