முதியவர் கம்பால் அடித்துக்கொலை: நண்பர் சரண்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முதியவரை கம்பால் அடித்துக் கொலை செய்த நண்பர் போலீசில் சரணடைந்தார். திருவாடானை அருகே மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா 70. விவசாயி. சீசனில் வேப்பம் முத்து சேகரித்து வியாபாரம் செய்வார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருமதி கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி 52. இவரும் அதே வேலை செய்தார். இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக பழகி வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு வீட்டிற்கு அருகே உள்ள வயல்காட்டில் கருப்பையா இறந்து கிடந்தார். தலையின் பின்பக்கம் காயம் இருந்தது. மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்ற எண்ணத்தில் உடலை வீட்டிற்கு துாக்கி வந்து இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை கருப்பையாவை கம்பால் அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி மாசிலாமணி திருவாடானை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் மாவிலங்கைக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் கூறுகையில், இருவரும் நீண்ட காலமாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கம்பால் அடித்ததில் கருப்பையா இறந்துள்ளார் என்றனர். கருப்பையாவிற்கு மனைவி, 1 மகன், 3 மகள்கள் உள்ளனர்.