ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் 8 டாக்டர்கள் பணியிடத்தில் ஒருவர் மட்டும்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எட்டு பணியிடத்தில் ஒரே ஒரு டாக்டர்மட்டுமே பணியில் உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள்சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லாத நிலை உள்ளதால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். இங்கு 8 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 5 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மீதமுள்ள மூன்று டாக்டர்களில் அருகில் உள்ள திருப்பாலைக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டாக்டர் அனுப்பப்பட்டதால் ஆர்.எஸ்.மங்கலம்அரசு மருத்துவமனையில் இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்து வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டரை தொண்டி மருத்துவமனைக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றியது.இதனால் ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே முழு நேரமாக பணிபுரிகிறார். இதனால் இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிக கிராமப் பகுதிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் இல்லாததால் பணியில் உள்ள ஒரு டாக்டரும் கடும் மன உளைச்சலில் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆர்.எஸ். மங்கல அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தினர்.