தொண்டி பேரூராட்சியில் நம்புதாளை ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
தொண்டி: தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொண்டி அருகே உள்ளது நம்புதாளை ஊராட்சி. 12 வார்டுகள் உள்ள இந்த ஊராட்சியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று நம்புதாளையில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைப்பதன் மூலம் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அடிப்படை வசதிகள் கேட்டு தொண்டிக்கு செல்ல வேண்டும் என்பதால் தொண்டியுடன் இணைக்கக் கூடாது என்று பேசினர். நம்புதாளை மக்கள் கூறியதாவது:திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் நம்புதாளை ஊராட்சி அதிக வாக்காளர்களையும், அதிக மக்கள் தொகையிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த ஊராட்சியை முதல் நிலை ஊராட்சியாக தரம் உயர்த்தி வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து தொண்டி பேரூராட்சியில் இணைப்பதால் எந்த பயனும் இல்லை. 100 நாள் வேலை இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைக்கக் கூடாது என கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.